2022/02/25. இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (Lanka IOC) அறிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமான லங்கா ஐ ஓ சி(Lanka IOC) வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சந்தையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள கடும் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனால், டீசலின் விலை ரூ. 15.00 ரூபாவினாலும், பெட்ரோலின் விலை லீற்றருக்கு 20.00 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாதவாறு வரலாறு காணாத உயர்வை சந்தித்து, கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 35% க்கும் அதிகமாக உயர்ந்து, பீப்பாய் ஒன்றிற்கு $100.00 டொலருக்கு மேல் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்குப் பின்னரான சூழ்நிலையில் , பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக் – OPEC) மற்றும் அவற்றின் நட்பு நாடுகளினது விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையுடன் இணைந்து உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படும் இடையூறுகள் எண்ணெய் விலைகளை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“தற்போதைய சர்வதேச விலைகளின்கீழ் இழப்புகள் மிக அதிகமாக இருப்பதாகவும், எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருவதாகவும், இருப்பினும், இன்னும் முடிவு எடுக்கப்படவில்ல” என எல்ஐஓசி நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா கூறினார்.
‘இதன் காரணமாகவே பெட்ரோல், டீசலின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்த விலை உயர்வுக்குப் பின்பும் , தற்போதைய சர்வதேச விலையில் இன்னும் கடுமையான நட்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்”.
பெருந்தொற்று காரணமாக அந்நிய செலாவணி வரத்து குறைவடைந்துள்ளதால் நாடு கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்கின்றது. இந்தச் சூழ்நிலையில், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான அதிகரிப்பு நாட்டின் அந்நிய செலாவணி இருப்பினை மேலும் மோசமாக்கி எரிபொருள் இறக்குமதியை பாதிக்கிறது என்று அவர் விளக்கினார்.