எல்லை நிர்ணயக் குழு தேர்தலுக்கு தடையாகுமா? – ஆராய்கிறது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய குழு, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு தடையாக அமையுமா? என்று தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கமைய, சட்டப்படியான தடைகள் ஏதும் இல்லாவிட்டால் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பான அறிவித்தலை விடுக்கும் அதிகாரம் கடந்த செப்ரெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலுக்கான அறிவித்தலை விடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேசிய குழுவொன்றை நியமித்து பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஜயலத் ரவி திஸாநாயக்க, டபிள்யு.எம்.எம்.ஆர். அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி குறித்த குழு பெப்ரவரி 28 ஆம் திகதி வரையில் செயற்படவுள்ளது. இதனால் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளுக்கு இந்தக் குழு தடையாக அமையலாம் என்று கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று அதன்படி நடப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love