ஏறும் டொலரின் விலை, இறங்குகிறது ரூபாயின்  பெறுமதி!


டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மிகமோசமாக சரியத் தொடங்கியதையடுத்து சகல பொருள்களினதும் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

ஒரு டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 250 ரூபாவுக்கும் மேலாக வீழ்ச்சியுற்றதால், பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக நேற்று முன்தினம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையேற்றத்தை அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கோதுமை மா, பாண், பணிஸ், மதிய உணவு, அத்தியாவசியப் பொருள்கள், வெதுப்பகப்பொருள்கள் போன்ற பலவற்றின் விலைகள் நேற்று எகிறியுள்ளன. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நேற்றுமுன் தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 50 ரூபாவாலும் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்தே நேற்று மேற்படி அத்தியவசியப் பொருள்கள் பலவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இதன்படி கோதுமை மா 35 ரூபாவாலும், பாண் 30 ரூபாவாலும், பணிஸ் 10 ரூபாவாலும், சோறு பார்சல் 20 ரூபாவாலும், கொத்துரொட்டி 30 ரூபாவாலும் ஒரு கிலோ பால்மா 300 ரூபாவாலும், 400 கிராம் பால்மா 120 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மருந்துகளின் விலைகள் 29 வீதத்தாலும் விமானப் பயணச்சீட்டு 27 வீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பையடுத்து பாணின் புதிய விலை 110 ரூபாவாகவும் கோதுமை மாவின் சில்லறை விலை 156 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக எரிபொருளை துணைப்பயன்பாட்டு மூலப்பொருளாகக் கொண்ட பொருள்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகின்றது. 

Spread the love