ஐ.நா. அலுவலகம் முன்  நஷ்ட ஈடு வேண்டாம் உறவுகளே வேண்டும் என கதறியழுத தாய்மார்கள் 

வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்திய வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் கொழும்பு  பௌத்தாலோக மாவத்தையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை காலை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச விசாரணையை கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான தாய்மார்கள் கலந்து கொண்டு கதறியழுத வண்ணம் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காணாமல்போனோர் அலுவலகமும் வேண்டாம், நஷ்ட ஈடும் வேண்டாம், எங்கள் குழந்தைகள் எங்களுக்கு வேண்டும், எமக்கான நீதி எமக்கு வேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே? வெள்ளை வானில் கடத்தப்பட்ட எமது உறவுகள் எங்கே? இராணுவத்தால் வீடு, வீடாக நுழைந்து இழுத்துச் செல்லப்பட்ட எமது உறவுகள் எங்கே? ஏமாற்றாதே ஏமாற்றாதே உறவுகளை ஏமாற்றாதே, எமது உறவுகளை விடுதலை செய் என தாய் தந்தையர் மற்றும் உறவுகள் கோஷங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து அவ்விடத்திற்கு வந்த ஐ.நா. அலுவலக அதிகாரிகள் தாய்மாரின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களிடமிருந்து மகஜரினையும் பெற்றுக்கொண்டனர். காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுடன் வண.பிதா சக்திவேலும் பங்கேற்று, ஐ.நா.அலுவலக அதிகாரிகளுக்கு தாய்மாரின் போராட்டத்தின் நியாயங்களையும் அரசின் அநீதியான செயற்பாடுகளையும் தெளிவுபடுத்தினார். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் இந்தப் போராட்டத்தினால் ஐ.நா. அலுவலகம் முன்பாக பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் இதேவேளை போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார் கருத்து தெரிவிக்கையில்,

எமது உறவுகள் எமக்கு கிடைக்கும்வரை இந்த போராட்டத்த்தை நாம் கைவிடப்போவதில்லை. குற்றம் செய்தவர்களையே விசாரணை அதிகரிகளாக நியமிக்கும் போக்கே அரசிடம் உள்ளது. காணாமல் போனோர் அலுவலகம் ஆணைக்குழுக்கள் என அரசு 10 வருடங்களுக்கும் மேலாக எமக்கான நீதியை வழங்காது இழுத்தடித்து வருகின்றது. மட்டக்களப்புக்கு வந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை நாம் 3 மணித்தியால போராட்டம் மூலம் விரட்டியடித்துள்ளோம். நாம் கேட்டு நிற்பது அனைத்துலக நீதியைத்தான். அரசின் நஷ்ட ஈடுகளையோ அல்லது அரசின் ஜனாதிபதி ஆணைக் குழுக்களையோ அல்ல என்றனர்.

Spread the love