இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சமீபத்திய தீர்மானத்தை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்திருந்தநிலையில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐ.நா.வினால் 3.4மில்லியன் டொலர் (120 கோடி ரூபா) ஒதுக்கப்படுவதையும் இலங்கை எதிர்த்துள்ளது.
பல்வேறு நாடுகள் மீது ஐ. நா. மனித உரிமைகள் உள்ளீர்த்துக் கொண்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை அதனுடன் தொடர்புபட்ட கருவிகள் மூலம் செயற்படுத்த உதவுவதற்காக 2023ஆம் ஆண்டிற்கான ஐ.நா.வின் பரிந்துரைக்கப்பட்ட திட்ட வரவு-செலவுத் திட்டத்தின் ஓரங்கமாக இந்தத் தொகை உள்ளது. நிர்வாக மற்றும் பட்ஜெட் விடயங்களுக்கு பொறுப்பான ஐ.நா பொதுச்சபையின் ஐந்தாவது குழுவில் இந்த வாரம் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் 51/1 இந்த வருடம் ஒக்ரோபரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதனை நிராகரிக்குமாறு இலங்கை அழைப்பு விடுத்திருந்ததுடன் அதுகுறித்து பிரதான அனுசரணையாளர்களுடன் ஈடுபட முயற்சித்த போதிலும், இலங்கையின் அனுமதியின்றி அது சமர்ப்பிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவருகிறது. குறிப்பாக, 2021 தீர்மானத்தின்மூலம் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் அரசுக்கு எதிராக நீதித்துறை மற்றும் ஏனைய அமர்வுகளுக்கு ஆதரவாக தகவலை சேகரிக்கவும் உறுதிப்படுத்தவும் ஆய்வு செய்யவும் பாதுகாக்கவுமென ஆரம்பிக்கப்பட்ட பணியைத் தொடரும் முன்மொழிவை இலங்கை நிராகரித்திருந்தது.
எந்தவொரு இறைமையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணானதாக அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை ஏற்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அந்த சமயத்தில் கூறியிருந்தார். அதேசமயம் இந்த வாரம் வெளியிடப்பட்ட மேம்படுத்தப்பட்ட பட்ஜெட் ஒதுக்கீடு, தொடர்பான விவகாரத்துடன் ஐந்தாவது குழுவானது உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் பணிகளுக்கும் ஆதரவளிக்கும். சம்பந்தப்பட்ட நாட்டினால் நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட ஐ.நா.வின் வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து வளங்களை அங்கீகரிக்க இந்தக் குழு கேட்கப்படுகிறது என்று கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்தார்.
இது சபையின் பிளவுபடுத்தும் மற்றும் அரசியல் தன்மையை நிரூபிக்கிறது. அத்துடன் திறமையான உள்நாட்டு நடைமுறைகளால் ஏற்கனவே மேற்கொள்ளப்படும் பணிகளை பிரதிபண்ணுகிறது, என்று அவர் கூறியுள்ளார். கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் பங்களிப்புகள் பயனுள்ளதாகவும் பாரபட்சமற்ற முறையிலும் வெளிப்படையான தன்மையுடனும் ஒரு சிலரின் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை திருப்திப்படுத்துவதற்கு அல்லாமல் மக்களின் பொது நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.