ஒரு சில வாரங்களில் ரணிலை வெளியேற்றுவோம் – பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சூளுரை

ரணிலை பயன்படுத்தி தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு ராஜபக்சக்கள் முயற்சிப்பதால் ஜனாதிபதியாகியுள்ள ரணிலை இன்னும் 2,3 வாரங்களில் நாம் வெளியேற்றி விடுவோம் என சூளுரைத்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிறைச்சாலைகளை விரிவுபடுத்தியும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை அதிகளவில் கொள்வனவு செய்தும் வைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக் கொண்டுள்ளது.


போராட்டக்களத்தில் இருக்கும் பலரை கைது செய்வதற்கான திட்டங்களுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், எத்தகைய ஒடுக்குமுறைகளின் ஊடாகவும் தமது போராட்டங்களை தடுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்போது கோத்தாபய ராஜபக்ச பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதன்மூலம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை பதவி விலக்க முடிந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தினால் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்து தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்த ஒரு வரை ராஜபக்சக்களின் பாதுகாப்புக்காக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற குழுக்களை ஈடுபடுத்தி ஒடுக்குமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றார். இதன்படி போராட்டத்தில் பெரும்பங்களிப்பை வழங்கிய தானிஸ் அலியை கைது செய்துள்ளனர். அவர் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் ஏறிய பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார். சி.ஐ.டி.யினர் என்ற குழுவினர் போக்குவரத்து பொலிஸாரை கொண்டு கைது செய்துள்ளனர். இதனை கைது என்று கூறமுடியாது இதனை கடத்தல் என்றே கூறவேண்டும். இங்கு பிரச்சினைகளுக்கு காரணமானவர்களும், மத்திய வங்கியை கொள்ளையிட்ட மற்றும் மக்கள் பணத்தை கொள்ளையிட்டவர்களும் வெளியில் இருக்கும் போது அதற்கு எதிராக போராடுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர். இப்போது போராட்டக்களத்தில் இருக்கும் பலரை கைது செய்வதற்கான திட்டங்களுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றது.

இதன் பின்னணியில் பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்காகவே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர். இப்போது பல்கலைக்கழக மாணவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். மாணவர்களின் விடுதிகளுக்கு முன்னால் வெள்ளை வான்களும் சுற்றுகின்றன. இந்நிலையில் ருகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் வெரங்க புஷ்பிக பஸ்ஸில் பயணிக்கும் போது கடத்தப்பட்டுள்ளார். இதேவேளை காலிமுகத்திடலில் பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் இருந்தவர்களையும், அந்த இடத்திற்கு செல்பவர்களையும் கைது செய்கின்றனர். இவ்வாறு கைதுகளை மேற்கொள்வதன் ஊடாக எங்களின் போராட்டங்கள் நிறுத்தப்படும் என்று நினைக்கக் கூடாது.

ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறைகளை செய்யும் போது அது தொடர்பில் சிரிப்பதை தவிர எங்களுக்கு வேறு எதனையும் செய்ய முடியாது. இந்த விடயத்தில் ரணில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் கணக்கில் எடுப்பதில்லை. 6 தடவைகள் பிரதமர் பதவியில் இருந்தும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாத மற்றும் பதவிக் காலத்தை பூர்த்தி செய்ய முடியாதவராகவே அவர் இருக்கின்றார். இவரின் செயற்பாடுகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை. எப்படியும் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் அவரின் கதையை முடித்து விடுவோம். அவர் ஜனநாயக ரீதியில் பதவிக்கு வரவில்லை. சனத் நிஷாந்த போன்றவர்களின் ஊடாகவே அவர் வந்துள்ளார். இப்போது ரணிலின் அரசாங்கத்தில் முன்னர் இருந்த மொட்டுக் கட்சிகாரர்களே இருக்கின்றனர். இவர்கள் மக்களின் ஆணையுடனேயே விளையாடுகின்றனர். இவர்கள் தமது வேலைத்திட்டங்களை வெளியில் கொண்டு வர வேண்டும். இதற்காக நாங்கள் பலத்தை உருவாக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒருவர், இருவரை கொன்றாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வைத்துக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். அதேபோன்று ரணிலை பயன்படுத்தி தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு ராஜபக்ஷக்கள் முயற்சிக்கின்றனர். இதனால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்போவதில்லை. இதனால் நாங்கள் வீதிக்கு இறங்குவோம். 2.3 வாரங்களையே ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவோம். மக்களுக்காக நாங்கள் வருவோம். இதன்போது கைது செய்து தடுக்கலாம் என்று நினைக்க வேண்டாம். அப்படி இதனை நிறுத்தமுடியாது. இவ்வாறு செய்தால் இன்னும் ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் இணையும் நிலைமையே ஏற்படும். ஆகவே சிறைச்சாலைகளை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை அதிகளவில் வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரணிலை கேட்கின்றோம். ஏனென்றால் இனி வருவது ரணிலுக்கு கஷ்டமான காலமே ஆகும். இதனால் அவரை கவனமாக இருக்குமாறு கேட்கின்றோம் என்றார்.

Spread the love