காலி முகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலி முகத்திடலில் இளைஞர்கள் இன்று, 9ஆவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அதேநேரம், ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் இன்று வலியுறுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, இன்றிரவு காலிமுகத்திடல் வளாகத்தில், போராட்டக்குழுக்களும் பொதுமக்களும் போராட்டத்தின் புதிய கருப்பொருள்களைக் காட்டி மக்களின் இறையாண்மையை வலுவூட்டுவதற்கு எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படமுடியும் என்பதை வெளிப்படுத்தும் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி ஜனாதிபதி செயலகத்தின் முன்பக்க சுவர்களில் ஒளித்திரை (ப்ரொஜக்டர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆக்கபூர்வமான யோசனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதேவேளை, அமைதியான போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது, ஊழல் ஆட்சியை எவ்வாறு முறியடிப்பது என்பதை நாட்டுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எடுத்துக்காட்ட முற்பட்ட கட்சிசார்பற்ற மேற்படி எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு பாதுகாப்பு தரப்பினர் தடைவிதித்த சம்பவம் ஒன்றும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.