டொமினிக்கன் குடியரசு நாட்டில் விமானம் ஓடுபாதையிலேயே விழுந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஃபுளோரிடாவில் இருந்து டொமினிக்கன் குடியரசு நாட்டின் லா இஸபெல்லா நகருக்கு சென்று கொண்டிருந்த தனியார் விமானம் ஒன்று தலைநகர் சான் டொமிங்கோவில் உள்ள லாஸ் அமெரிக்காஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிடோச அவியேஷன் குழுமத்திற்கு சொந்தமான இந்த விமானம் 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் அங்கிருந்து புறப்பட்ட போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையிலேயே விழுந்தது.
இந்த விபத்தில் 7 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என அனைவரும் உயிரிழந்தனர். பயணிகளில் ஒருவர் மட்டுமே டொமினிக்கன் குடியரசு நாட்டை சேர்ந்தவர். எஞ்சிய 6 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக கவலை தெரிவித்துள்ள ஹெலிடோச அவியேஷன் குழுமம், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளது. விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.