கச்சதீவு திருவிழாவில் பக்தர்களுக்குத் தடை! 

அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பக்தர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இன்று மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்த கடற்றொழில் அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். முன்னதாக இலங்கைப் பக்தர்கள் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பக்தர்கள் எவரும் கலந்துகொள்ள முடியாது என்று கொழும்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் நடைபெறவுள்ளது. திருவிழாவுக்கான முன்னாயத்தக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோது, இலங்கையைச் சேர்ந்த 500 பக்தர்களைத் திருவிழாவுக்கு அனுமதிப்பது என்றும், இந்தியப் பக்தர்களை இந்த முறை அனுமதிப்பதில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

தற்போதுள்ள கொரோனாப் பரவல் நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் கச்சதீவுத் திருவிழாவில் தங்கள் நாட்டுப் பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து கோரிக்கைகள் எழுந்திருந்தன. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த கடற்றொழில் அமைச்சர், கச்சதீவுத் திருவிழாவுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான கோரிக்கை சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது இருநாட்டுப் பக்தர்களையும் திருவிழாவுக்கு அனுமதிப்பதில்லை என்று சுகாதார அமைச்சால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பக்தர்களை அனுமதிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், பிரச்சினைகளைத் தவிர்க்கும் நோக்குடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகின்றது.

Spread the love