கடந்த அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக நடைபெற்ற போராட்டத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் பாதுகாப்புத் தரப்பினர் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் இதில் தீவிரமுனைப்புக் காட்டி வருகிறது.
ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் சீசீரிவி காட்சிகள், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான காட்சிகள் மற்றும் புகைப் படங்களை அடிப்படையாகக் கொண்டு சந்தேக நபர்கள் பலர் தொடர்ந்தும் தினமும் பாதுகாப்பு தரப்பினரால் தேடப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்கெதிராக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த கைதுகள் தொடர்கின்றது.
ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், அவர்கள் தொடர்பில் பொது மக்களின் உதவியுடன் தகவல்களை சேகரித்து வருகின்றனர். இதன்படி கடந்த சில நாட்களில் சந்தேக நபர்கள் பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை காலிமுகத்திடல் போராட்டம் சம்பவம் தொடர்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உள்ளிட்ட மூவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் 90 நாட்கள் தடுப்பில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
போராட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகள் தொடர்பில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நேற்றைய தினமும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், அலரிமாளிகைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பில் பலாங்கொட காசியப்ப தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள இவர், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புடைய சேனாதி குருகேவும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடலில் புலனாய்வு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி மாளிகைக்குள் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றச் சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 10 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில், அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காலிமுகத்திடல் போராட்டத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களை தேடி பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.