அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அபூர்வமான தாவரத்தை கண்டுபிடித்தனர்.
மரபணுக் கருவிகளை பயன்படுத்தி ஷார்க் விரிகுடாவில் உள்ள கடற்புல்வெளிகளின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ள முயன்றபோது, 180 கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தாவரத்தை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கடற்புல் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஒரேயொரு விதையிலிருந்து சுமார் 4,500 ஆண்டுகளாக இந்த கடற்புல் தாவரம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பெர்த் நகரத்தின் வடக்கில் 800 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடா கடற்கரையில் இந்த தாவரத்தை தற்செயலாக கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் அதைக் கண்டவுடன் திகைத்துப் போய்விட்டனர்.
இதன் பின்னர் அத்தாவரத்தின் மரபணு வேறுபாட்டை புரிந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். அவுஸ்திரேலிய கடற்கரையின் பல பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் இந்த கடற்புல் ‘ரிப்பன் வீட்’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கடற்புல்லின் தளிர்களை சேகரித்து அதன் ஒவ்வொரு மாதிரியிலிருந்தும் தனித்த “தடயங்களை” உருவாக்க மரபணு குறிப்பான்களை ஆய்வு செய்தனர்.
எத்தனை தாவரங்கள் ஒன்றிணைந்து இந்த நீளமான கடற்புல் தாவரம் உருவானது என்பதை அவர்கள் கண்டறிய முற்பட்டனர். ஆனால், அது ஒரேயொரு தாவரம் தான் என்பதை அறிந்து அவர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இந்த கடற்புல் இனம் ஒரு புல்வெளியாக ஆண்டுக்கு 35 சென்டிமீட்டர் நீளம் வரை வளரும். அதனடிப்படையில் தான் தற்போது இவ்வளவு நீளத்திற்கு இத்தாவரம் வளர 4,500 ஆண்டுகள் ஆகியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.