கட்டுவன் மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் தூர பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ தளபதிக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். பாதுகாப்பு பற்றிய ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, தற்பொழுது பாதுகாப்புத் தரப்பினரால் கவனம் செலுத்தப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் முன்வைக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் கட்டுவன் – மயிலிட்டி வீதியில் உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது இந்த வீதியை விடுக்க வேண்டும் என எடுத்து கூறினார். இதன்போதே ஜனாதிபதி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, முப்படைகளின் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதேநேரம் கட்டுவன் மயிலிட்டி வீதியில் படையினர் 30 மீற்றர் தூரம் வேலியை நகர்த்த வேண்டுமானால் விமானப்படையினர் தமது அரணை 30 மீற்றர் பின் நகர்த்த வேண்டும் என்பதனாலேயே இந்த விடயம் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது