காணாமல் போனோர் குடும்பத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைவாக காணாமல் போனோரின் நெருங்கிய உறவினருக்கு ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் இந்த கொடுப்பனவு உரித்தாகும். நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி நேற்று(14) நடைபெற்ற அமைச்சரவையில் இது தொடர்பாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது குறித்த அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:
காணாமல் போன ஆட்களின் குடும்பங்களை மீள்வாழ்வளிப்பதற்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவை வழங்கல், இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய, பல்வேறு நிலைமைகளின் கீழ் ஏற்பட்ட தொந்தரவுகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் மீள்நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பதற்காகவும் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்கால சந்ததியினர் உள்ளிட்ட இலங்கையர்களின் நலன்களுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அக்குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது.
2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போன நபர்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாய்களைச் செலுத்துவதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.