22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 4 ஆவது நாள் போட்டி முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் பெற்று இருந்தது. நேற்று முன்தினம் 5 ஆவது நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிடைத்தது.
லான்பவுல்ஸ் பந்தயத்தில் ரூபா ராணி , லவ்லி சவுபே, நயன்மோனி , பிங்கி சிங் ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் சரத்கமல், ஜி.சத்யன் , ஹர்மித் தேசாய், சனில்ஷெட்டி ஆகியோர் அடங்கிய அணி தங்கப்பதக்கம் பெற்றது.
பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் தாக்கூர் (96 கிலோ ) வெள்ளி பதக்கம் வென்றார். பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா , திரிஷா ஜோலி , ஆகர்ஷி காஷ்யப், ஸ்ரீகாந்த் கிடாம்பி , சாத்விக் சாய்ராஜ் ரன்கிர் ரெட்டி , சுமித் ரெட்டி, லக்ஷயா சென், சிராக் ஷெட்டி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.
நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோற்றது. முதலில் நடந்த இரட்டையர் ஆட்டத்தில் ரன்கிர் ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 15-21 என்ற கணக்கில் தோற்றனர். 2-வது ஆட்டத்தில் பி.வி.சிந்து 22-20, 21-17 என்ற கணக்கில் யாங்கை வீழ்த்தினார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஸ்ரீகாந்த் கிடாம்பி 19-21, 21-6, 16-21 என்ற கணக்கில் தோற்றார்.
இதே போல திரிஷா ஜோலி-காயத்ரி ஜோடியும் 18-21, 17-21 என்ற கணக்கில் தோற்றனர். வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மின்டன் கலப்பு அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் காமன் வெல்த்தில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய கலப்பு அணிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். திறமை, ஒருங்கிணைந்த செயல்பாடு, போராடும் குணம் வியக்கத்தக்க வகையில் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.