கொழும்பு – காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 17ஆவது நாளாகவும் தொடர்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு பல தரப்பினராலும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டாலோ அல்லது ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு விளைவிக்கப்பட்டாலோ இந்த அலுவலகத்தின் ஊடாக இலவச சட்டஉதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டபேரணி நேற்று இரவு கொழும்பு காலி முகத்திடலை வந்தடைந்தது.
கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அங்கிருந்து கொழும்பு காலி முகத்திடலை சென்றடைவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் காலி முகத்திடலுக்கு செல்லும் சில உப வீதிகள் நேற்று காலை முதல் மூடப்பட்டிருந்தன. குறித்த பகுதிகளில் அதிகளவிலான பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதித்தடையினை ஏற்படுத்தி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டபேரணி, தொழிநுட்பசந்தியின் ஊடாக பஞ்சிக்காவத்தை சந்தியை கடந்து அங்கிருந்து பொரளை விஜயராம மாவத்தையை அடைந்தது. அதன்பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விஜேயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்திருந்தனர். இதன்காரணமாக அங்கிருந்த பாதுகாப்பு படையினருக்கும் மாணவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. மாணவர்கள் வீதி தடைகளை வீழ்த்தி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
எவ்வாறிருப்பினும் பொரளையில் இருந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் இணைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.