
இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான குசல் மெண்டிஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். சிட்னியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விரைவான ஆன்டிஜென் பரிசோதனையின்போதே அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் தசூன் ஷானக்க இன்று நடைபெற்ற இணைய வழி ஊடக சந்திப்பின்போது கூறினார்.
பெப்ரவரி 11 ஆம் திகதி ஆரம்பமாகும் ஐந்து போட்டிகள் கொண்ட T-20 தொடரில் அவுஸ்ரேலியாவை எதிர்கொள்ளும் 20 பேர் கொண்ட இலங்கை அணியில் குசல் மெண்டீஸும் ஒரு வீரராக இருந்தார். சுற்றுலா இலங்கை அணியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்றாவது வீரர் இவர் ஆவார். குசல் மெண்டீஸ் தற்போது கொவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு நேற்று முதல் தனிமைப்படுத்தலில் உள்ளார். இதற்கு முன்னர் நுவான் துஷார மற்றும் சமிக கருணாரத்னவும் மற்றும் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் ருமேஷ் ரத்நாயக்க, பயிற்சியாளர் டில்ஷான் பொன்சேகா ஆகியோரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.