குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதா?- பொலிஸார், தொல்லியல் திணைக்களம் விளக்கமளிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் பணிப்பு

குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரது விளக்கத்தைக் கோரியுள்ள முல்லைத்தீவு நீதிமன்றம், குறித்த வழக்கினை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 13ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கலை எதிர்த்து குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று கடந்த புதனன்று இடம்பெற்றது.

இந் நிலையில் குருந்தூர் மலை தொடர்பாக ஏற்கனவே AR/673/18 என்ற வழக்கிலக்கத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணைகள் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றன. இந்த வழக்கில், 12.06.2022இற்கு முன்னிருந்த நிலையை பேணுமாறு நீதிமன்றம் இறுதியாக 19.06.2022 அன்று கட்டளை பிறப்பித்திருந்தது. நீதிமன்றால் வழங்கப்பட்ட குறித்த கட்டளையானது மீறப்பட்டதாகவும், அவ்வாறு மீறப்பட்டதாலேயே கடந்த புதனன்று தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண் டதாகவும், தமிழ் மக்கள் சார்பான சட்டத்தரணிகள் புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்தனர். இதனையடுத்தே அவ்வாறு நீதிமன்றக்கட்டளை மீறப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரது விளக்கத்தைக் கோரியுள்ள நீதிமன்றம், குறித்த வழக்கினை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 13 5 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தமிழ் மக்கள் சார்பாக  மன்றில் முன்னிலையாகியிருந்தசட்டத்தரணிகளுள் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் கருத்துத் தெரிவிக்கையில், இந்தவழக்கில் முன்னாள் வடமா காணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக ஆர்வலர் இரத்தினராசா மயூரன் ஆகியோரையும் கைது செய்து பொலிஸார் மன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த குருந்தூர்மலை விடயமானது ஏற்கனவே நீதிமன்றினால் AR/673/18 என்ற வழக்கிலே வழங்கப்பட்ட கட்டளை அதாவது, 12.06.2022 இற்கு முன்னிருந்த நிலைமையை பேணுமாறு வழங்கிய கட்டளையினை தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும், குருந்தூர்மலையிலுள்ளவர்களும் மீறியதாலேயே 21.09.2022 புதனன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டதென மன்றிற்குச் சுட்டிக்காட்டி அது தொடர்பான புகைப்படங்களையும் சமர்ப்பித்தோம். மன்றானது இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரியினை வினவியதன் பின்னர், அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பாக அவர்களுடைய பதிலைத் தருவதற்காகவும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளரை அடுத்த தவணை தோன்றி மன்றில் பதிலளிக்குமாறும் கூறி, வழக்கினை வருகின்ற ஒக்ரோபர் மாதம் 13ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது. அதுவரை ஏற்கனவே மன்றினால் வழங்கப்பட்ட 12.06.2022 இற்கு முன்னர் இருந்த நிலைமையைப் பேணுவதற்கு தாம் உத்தரவாதம் தருவதாக பொலிஸார் கூறியிருந்தார்கள் என்றார்.

Spread the love