ஏப்ரல் 14ஆம் திகதி வரை வேறுபட்ட மக்கள் தொகைகளைக் கொண்ட 240 ஆர்ப்பாட்டங்கள் வேறுபட்ட சமூகக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதை ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பு சுட்டிக்காட்டுகின்றது. இவற்றில் மீனவச் சமூகங்களால் காலி மற்றும் அம்பலாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், தச்சுத் தொழிலாளர்கள் மொரட்டுவையில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம், தனியார் பேருந்துச் சாரதிகள் அநுராதபுரத்தில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம், கண்டி, கேகாலை மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் சுகாதாரப் பணியாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள், சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் கட்டுநாயக்கவில் முன்னெடுத்த போராட்டம் என்பவற்றுடன் அக்கரைப்பற்று, பலாங்கொடை, பண்டாரவளை, மட்டக்களப்பு, தம்புள்ளை, கம்பளை, ஹபரணை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கண்டி, களனி, குருணாகல், மன்னார், மின்னேரியா, முல்லைத்தீவு, நுவரெலியா, பாணந்துறை, ராகமை, திஹாரி, வவுனியா, வலஸ்முல்லை மற்றும் யக்கலை ஆகிய பிரதேசங்களில் பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் உள்ளடங்குகின்றன.
குடிமக்கள் பரந்த அளவில் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளை, இளைஞர்களின் எதிர்ப்பு என முத்திரை குத்துவதன் மூலம் இளைஞர்கள் தாம் என்ன செய்கின்றனர் என அறியாததால் இப்போராட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கத்தேவை இல்லை என்ற கருத்து நிலவுகின்றது. இதன் மூலமாக பொதுமக்கள் பாரிய அளவில் மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை வலுவற்றதாக காண்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏப்ரல் 11 அன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஆர்ப்பாட்டக்காரர்களை ‘இளைஞர்கள்’ மற்றும் ‘இளம் மக்கள்’ என விழித்ததுடன் அவர்களின் ‘பெரியவர்கள்’ மற்றும் ‘பெற்றோர்’ இளைஞர் ஆர்ப்பாட்டங்களின் எதிர்மறை விளைவுகளை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலமாக இளைஞர்களை வழிதவறியவர்களாக காண்பிக்கும் வழமையான உத்தியை அவர் கடைப்பிடித்திருந்தார். சிவில் சமூகம் கூட தம்மையறியாமல் இந்தக் கதையை உண்மையாக்கும் பொறிக்குள் விழுந்ததை அவதானிக்க முடிகின்றது. அதிகாரத்தில் உள்ளோரை தமது செயற்பாடுகளுக்கு பொறுப்புக் கூறுபவர்களாக ஆக்கும் தமது கடமை பற்றிய தெளிவான புரிதல் கொண்டவர்களாகக் காணப்படும் இளைஞர்களை அரசியல் சாராத அல்லது அரசியலில் அக்கறையற்றவர்களாக சித்தரிப்பது பிழையான சித்தரிப்பாக அமைவதுடன் ஒன்றிணைந்த அரசியல் போராட்டம் ஒன்றுக்கு எதிர்விளைவு ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது.
அரசியலும் அரசியல் கட்சிகளும்
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தமது காலி முகத்திடல் ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகளை இணைந்து கொள்ள அனுமதிக்காததால் அவர்கள் “அரசியலை நிராகரிக்கின்றனர்” எனக் குறிப்பிட்டு சிவில் சமூகத்தின் சில பிரிவுகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன இந்த இளைஞர்களை விமர்சிக்கின்றன. இருந்த போதும், அரசியலமைப்பு மீதான 20ஆவது திருத்தத்தை நீக்குதல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் போன்ற கோரிக்கைகள் அவ்விளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வை எடுத்துக்காட்டுகின்றது. மேலும், போராட்டங்களுக்கு தலைமை வகிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுகின்றது. அவ்வாறான அரசியல் ஈடுபாடு இல்லாத பட்சத்தில் முரண்பாடுகளை தணிக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு உரிய சட்டரீதியான பிரதிநிதித்துவம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கிடைக்காமல் போகும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும், அவர்களின் “கொள்கை இசைவின்மை” பற்றிய அச்சங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இளைஞர்கள் மாத்திரமன்றி பொதுமக்களும் அரசியல் கட்சிகளை நிராகரிக்கின்றனர். அரசியல் கட்சிகள் நேர்மறையான தாக்கம் ஒன்றை ஏற்படுத்தாததும் நேர்மையான கொள்கை நிலைப்பாட்டை கொண்டிருக்காததும் இந்நிராகரிப்புக்கு காரணமாக அமைகின்றது. தமக்கிடையே சாதகமான டீல்களை மேற்கொள்வதும் ஒருவரை ஒருவர் பாதுகாப்பது போன்ற செயற்பாடுகள் இதற்கு உதாரணமாக அமைகின்றன. இவ்வாறான சூழமைவு ஒன்றில், தமது ஆர்ப்பாட்டங்களை அரசியல் கட்சிகள் இணைவதைத் தடுப்பதற்காக இளைஞர்களைக் குறை கூறுவது ஏற்கத்தக்க விடயமாக அமையவில்லை. இதற்கு மாறாக, அரசியல் கட்சிகள் தமது நேர்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையே அனைத்து தரப்பினராலும் முன்வைக்கப்பட வேண்டும். இறுதியாக நாடாளுமன்றம் கூடிய போது அனைத்து அரசியல் கட்சிகளதும் செயற்பாடுகளும் அரசியல் கட்சிகள் மீது மக்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை எந்த விதத்திலும் குறைக்கும் விதத்தில் அமைந்திருக்கவில்லை (ஆம், அவை தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தைப் பொறுப்புக் கூற வைப்பதற்கு நாடாளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதை விடுத்து காலம் கடத்துவதிலேயே கவனம் செலுத்தின).
தைரியமாக வெளியே வந்து ஜனாதிபதியை இராஜினாமாச் செய்யக் கோரும் இளைஞர்களிடம் எதுவுமே செய்யாமல் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எவற்றையும் மேற்கொள்ளாத அரசியல் கட்சிகள் தம்மீது நம்பிக்கை வைக்குமாறு இளைஞர்களிடம் கோருவது நியாயப்படுத்த முடியாத விடயமாக அமைகின்றது. இவ்வாறானதொரு உணர்வே இலங்கையின் சிதைந்து போன அரசியல் கலாச்சாரத்தின் அடிப்படையாக அமைகின்றது. இந்த உரித்துவ உணர்வையே இளைஞர்கள் இப்போது நிராகரிக்கின்றனர். அவர்கள் அரசியலை நிராகரிக்கவில்லை. இலங்கையில் நிலவும் கட்சி அரசியல் கலாச்சாரம், பக்கச்சார்பு மற்றும் தமக்கு சார்பானவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் போன்றவற்றினாலேயே முன்னெடுக்கப்படுகின்றது. இந்த கலாச்சாரம் ஒரு சாதாரண விடயமாக மாற்றப்பட்டு பல தசாப்தங்களாக மாற்றப்பட முடியாமல் நிலைத்து நிற்கின்றது. இந்தக் கலாச்சாரத்தையே இளைஞர்கள் நிராகரிக்கின்றனர்.
பொறுப்புக்கூறலை கோரி குடிமக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை இளைஞர்களின் போராட்டம் என முத்திரை குத்துவதன் மூலம் தமிழ் சமூகம் போன்ற சிறுபான்மைச் சமூகங்கள் பல தசாப்தங்களாக முன்னெடுக்கும் உரிமைகளுக்கான போராட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இவ்வாறான சமூகப் போராட்டங்கள் அரசாங்கத்தை, குறிப்பாக ராஜபக்ஷக்களை சவாலுக்கு உட்படுத்தும் போராட்டங்களாகக் காணப்படுகின்றன. உதாரணமாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது 1,881 நாட்களையும் கடந்து முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டங்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதில்களைக் கோரி, குறிப்பாக கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் பதில்களைக் கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இக்குழுக்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் மீது பாதுகாப்பு தரப்பினரால் உளவு பார்த்தல், மிரட்டல், தொந்தரவு மற்றும் அச்சுறுத்தல் என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களை நடத்தும் முக்கிய நபர்கள், பிரதானமாக பெண்களின் வீடுகளுக்குப் பாதுகாப்பு தரப்பினர் செல்லுதல், தொலைபேசி அழைப்புகள் மூலம் அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றி விசாரித்தல் என்பன நிகழ்வதுடன் இன்னும் சிலர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு (TID) அழைக்கப்படுகின்றனர். எனவே, சுதந்திரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான சாதக நிலை ஈடுபடும் மக்களின் இனம், பிராந்தியம் மற்றும் பொருளாதார படிநிலை போன்ற காரணிகளில் தங்கியிருக்கின்றது. இந்நிலை மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள போதிய அளவான மக்கள் தொகையைக் கொண்டிருக்காத ஆர்ப்பாட்டங்களில் தெளிவாக அவதானிக்கப்படலாம்.
மீட்கப்படுவோம் என எதிர்பாரத்தல்: இதுவே இலங்கையின் நிலை
ஆர்ப்பாட்டங்களுக்கு தலைவர்கள் அவசியம். அத்துடன், அவை கோட்பாடு ரீதியாக முன்கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனெனில், மக்கள் வீதிக்கு இறங்குமாறு அழைக்கப்படும் வேளை அவர்களை அழைப்பது யார் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது வளர்ந்து வரும் மற்றொரு கருத்தாகும். எனினும், எவராவது இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் மக்களை அழைக்கின்றனரா? கொழும்பைச் சூழ முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் அதிகமானவை மக்களின் சிறு குழு ஒன்றினால் ஆரம்பிக்கப்பட்டனவாகவே காணப்படுகின்றன. அவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தீர்மானித்து தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அவற்றில் பங்கேற்க ஊக்குவித்து, ஆர்ப்பாட்டங்களை சமூக ஊடகம் ஊடாகப் பகிர்ந்து மற்றவர்களையும் இணைந்து கொள்ள ஊக்குவித்தனர்.
இந்தப் போராட்டங்களை யார் ஒருங்கிணைக்கின்றனர் என்பது பற்றிய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எனினும், யதார்த்தத்தில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்திராத வேறுபட்ட சமூகக் குழுக்களே காலி முகத்திடலில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. இப்போராட்டங்களை ஒருங்கிணைப்பது மற்றும் மக்களை ஒன்று திரட்டுவது என்பன ஒற்றை அமைப்பினால் மேற்கொள்ளப்படுவது போல் தோன்றவில்லை. இதற்கான சான்றாக இரண்டு யதார்த்தங்களை முன்வைக்க முடியும். முதலாவதாக, கொழும்புக்கு வெளியே இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நபர்களின் ஒத்த தன்மை, இது அந்தந்த பிரதேசங்களில் உள்ள மக்களால் முன்னெடுக்கப்படுவதை பிரதி பலிக்கின்றது. இரண்டாவதாக, காலி முகத்திடலில் கலந்துகொள்ளும் மக்களின் வேறுபட்ட தன்மைகள் இவ்வாறான பாரியதொரு வேறுபட்ட மக்கள் தொகையை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்தல் ஒற்றை அமைப்பினால் சாத்தியமற்ற விடயம் என்பதை எமக்கு புலப்படுத்துகின்றது. ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமைத்துவம் ஒன்று காணப்படவில்லை என்று புலம்பும் தரப்புகள் அதிகாரங்களை மையப்படுத்தி “உறுதியான தலைவர்” ஒருவராலேயே இலங்கையைக் காப்பாற்ற முடியும் என நாம் நீண்டகாலமாக கொண்டுள்ள ஏக்கத்தை சுட்டிக்காட்டுகின்றதா என எண்ணத் தோன்றுகின்றது. இந்த ஏக்கம் பகுத்தறிவற்ற கொள்கை வழிபாட்டை உருவாக்க ஏதுவாகின்றது. அத்துடன், இவ்வாறான நிலையில் ஆட்சியில் உள்ளோருக்கும் மக்களுக்கும் இடையான உறவு பொறுப்புக் கூறலை அடிப்படையாகக் கொண்ட உறவு அல்ல. மாறாக, அதிகார படிநிலையில் உயர்ந்தவருக்கும் தாழ்ந்தவருக்கும் இடையான சமத்துவமற்ற உறவாகவே அமையும்.
உங்களின் எல்லைகளுக்குள்ளேயே செயற்படுங்கள்
கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்களின் ஆரம்ப கோரிக்கை தடையற்ற மின்சாரம், எரிபொருள், மற்றும் எரிவாயு வழங்கலாக இருந்தது. அதன் பின்னர் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என மாற்றமடைந்த இந்தக் கோரிக்கை பின்னர் ஒட்டு மொத்த ராஜபக்ஷ குடும்பமும் பதவி விலக வேண்டும் என விரிவடைந்தது. காலி முகத்திடலில் காணக்கிடைத்த ஆர்ப்பாட்ட சுலோகங்கள் பரந்தனவாக இருந்த போதும் அவை கிராமப்புற விவசாயிகள் மற்றும் மீனவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியனவாகவோ அல்லது அவற்றை பிரசித்தப்படுத்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. உதாரணமாக, யாழ்ப்பாணத்தின் வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் இன்னும் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்கக் கோரல் போன்ற சகோதர இனத்தின் கோரிக்கைகளை உள்ளடக்கியோ இந்த சுலோகங்கள் அமைந்திருக்கவில்லை.
இந்த ஆர்ப்பாட்டங்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நோக்கும் வேளை இரண்டு கருப்பொருட்கள் அக்கோரிக்கைகளில் உள்ளடங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது. அவற்றில் ஒன்று வெளிப்படையானதாகவும் மற்றையது மறைவானதாகவும் அமைந்திருந்தது. கோட்டபாய உள்ளடங்கலாக ஒட்டு மொத்த ராஜபக்ஷ வம்சத்தையும் இராஜினாமாச் செய்யக் கோருவதுடன் இணைந்திருந்த அரசாங்கத்தின் மீதான கடுமையான விமர்சனம் வெளிப்படையான கருப்பொருளாக அமைந்திருந்தது. செயலிழந்த இலங்கை அரச முறைமையினை மீள கட்டியெழுப்புவதும் பொதுமக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களை பொறுப்புக் கூற வைப்பதற்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்வதும் மறைமுகமான கோரிக்கை கருப்பொருளாகக் காணப்பட்டது.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் அரசியலமைப்பு சீர்திருத்த தொடர் செயற்பாடு ஒன்றில் தாம் பேரம் பேசும் சக்தியாக செயற்பட வேண்டும் அல்லது அரசியல் பேச்சு வார்த்தைகளில் தாமும் ஒரு தரப்பாக உள்வாங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன், நாட்டை மீட்டெடுக்கும் தொடர் செயன்முறையை ஆரம்பிப்பதற்கு அவசியமான முக்கியமான விடயங்களை தமது கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். பிரதான எதிர்க்கட்சி உள்ளடங்கலாக ஏனைய எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம், நிபுணர்கள் போன்ற தரப்பினர் இம்மாற்றத்தை கொண்டுவருவதற்கான வழிமுறைகளை முன்வைக்க வேண்டும். ஊடகங்கள் இவ்வழிமுறைகளை மக்கள் மயப்படுத்த வேண்டும். இவற்றின் வரம்புகள், அமைப்புகள் மற்றும் சட்டங்களுக்கு முன்மொழியப்படும் மாற்றங்கள் என்பன பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அவற்றுக்கான பொது ஒப்புதலை உருவாக்குவது ஊடகங்களின் வகிபாகமாக அமைந்துள்ளது.
இதேவேளை, சிவில் சமூகம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்/ அறிக்கைகளின் வரைபுகளை உருவாக்குவதற்கான குழுக்கள் பற்றிய பரிந்துரைகளையும் மேற்கொண்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட ஒன்று கூடலிலும் “என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அடையாளம் காண்பதற்கான குழு ஒன்றை உருவாக்கும்” தீர்மானம் மாத்திரமே எட்டப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆர்ப்பாட்டங்களுக்கு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தலைமைத்துவம் வழங்கவோ அவற்றைக் கட்டுப்படுத்தவோ கூடாது. அதற்கு மாறாக, இயலுமான தளங்களில் தமது ஆதரவுகளை ஆர்ப்பாட்டங்களுக்கு வழங்க முயற்சிக்க வேண்டும். அத்துடன், தமது நிபுணத்துவத்துக்கு ஏற்ப எவற்றில் சிறப்பாக செயற்பட முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கவனிக்கப்படாத விடயங்கள் மற்றும் அனைவரையும் உள்வாங்கும் அணுகுமுறை
ஆர்ப்பாட்டங்களில், குறிப்பாக காலி முகத்திடல் ஆர்ப்பாட்டங்களில் அனைத்து தரப்பினரையும் உள்வாங்கும் அணுகுமுறையை பின்பற்றுவது பெறுமதி மிக்கதாக அமைவதுடன் ஜனாதிபதிக்கு இராஜினாமா செய்வதற்கான அழுத்தத்தை அதிகரிக்க உதவும் என பலர் கருதுவதாகத் தெரிகின்றது. இது ஒரு மூலோபாயம் மிக்க வழிமுறையாக அமையும் அதே வேளை, அனைவரும் பொது நோக்கு ஒன்றுடன் செயற்படும் இத்தருணம் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பதற்கு காரணமாக அமைந்த வரலாற்று ரீதியான, முறைமைசார் மற்றும் கட்டமைப்பு பிரச்சினைகளை உடனடியாக இல்லாதொழித்து விடும் என்ற மாயையை எம்மால் கொண்டிருக்க முடியாது அல்லது இது மாயமான முறையில் முறைமை மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்க முடியாது. தமிழ் சமூகத்தை பொறுத்த வரை அச்சமூகம் எதிர்கொள்ளும் வரலாற்று ரீதியான மற்றும் முறைமை ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். இப்பிரச்சினைகளுக்கு உதாரணங்களாக யுத்தம் நிறைவுற்று 13 வருடங்கள் கடந்த நிலையிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்படாமை, யுத்தத்தில், விசேடமாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூற வைக்கப்படாமை, மொழி உரிமைகளை நிலைநிறுத்தாமல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் மீறல்கள், வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கல் மற்றும் தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்பு என்பன சுட்டிக்காட்டப்படலாம்.
இந்த அனைவரையும் உள்வாங்கும் அணுகுமுறையின் கீழ் இனவாதத்தைத் தூண்டிய பௌத்த பிக்குகள் மற்றும் ராஜபக்ஷ அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கு பங்களித்த, அதற்கு ஆதரவளித்த மற்றும் அந்த அரசாங்கத்தின் மூலம் நியாயமற்ற முறையில் நன்மைகளை அடைந்த நபர்கள் போன்றோரும் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நபர்களின் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமை எந்த வகையிலும் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாததாக அமையும் அதே வேளை, அவர்களின் மனமாற்றம் கேள்விக்குட்படுத்தப்படாமல் ஏற்கப்பட முடியாததாகும். அவ்வாறானவர்களின் கடந்த கால நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்புக் கூற வைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் தமது பிழைகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக அரசுக்கு ஆதரவளிப்பதற்கு அவர்களைத் தூண்டிய இனவாதம் போன்ற காரணிகளை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு அவற்றைத் திருத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும்.
வரலாற்று ரீதியாக பாகுபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்ட நிலையில் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் கோசங்கள் மற்றும் கோரிக்கைகளில் உள்ளடக்கப்படாமை அம்மக்கள் இவ்வார்ப்பாட்டங்களில் பங்குகொள்ள தயங்குவதற்குரிய காரணமாக அமையலாம். உதாரணமாக, தோட்டத்தொழிலாளர்களின் நியாயமான வேதனம் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கில் நிகழும் நில ஆக்கிரமிப்பு என்பன தொடர்ச்சியாக சமூகங்களை பாதிக்கும் விடயங்கள் உதாரணமாகும். இந்நிலைக்கு மூன்று விடயங்கள் காரணமாக அமையலாம்: முதலாவது, இப்போராட்டங்களின் பரவலாக்கப்பட்ட தன்மை காரணமாக சுலோகங்கள் தொடர்பான பொது உடன்பாடு இல்லாமல் இருத்தல். இரண்டாவது, தெற்கின் பொதுமக்களுக்கு இப்பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருத்தல். மூன்றாவது, இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மூல காரணம் ஒரு இனவாத அரசின் கொள்கைகள் செயலிழப்பு மற்றும் ஆட்சிமுறை காரணமாக ஏற்பட்ட நெருக்கடிகள் என தெற்கு மக்கள் அறியாதிருத்தல். இதன் காரணமாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறைந்த அளவிலான மக்கள் பங்கு கொண்ட ஆர்ப்பாட்டங்கள் குறைந்த எண்ணிக்கையில் நடந்தேறியுள்ளன. மேலும், அம்மக்கள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்களால் அடைந்த களைப்பு, தாம் நீண்ட காலம் போராடியுள்ளோம் என்ற உணர்வு மற்றும் இது தெற்கு மக்கள் மேற்கொள்ள வேண்டிய போராட்டம் என்ற உணர்வு போன்றனவும் இந்நிலைக்குரிய ஏனைய காரணங்களாகும்.
மேலும், வடக்கு கிழக்கில் மக்கள் மேற்கொள்ளும் போராட்டங்கள் தெற்கினால் முக்கியமாக தெற்கின் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டன. தெற்கிலிருக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கூட தெற்கின் ஊடகங்களுக்கு இது தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. ஆனாலும், தற்போது தெற்கின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு வடக்கு மற்றும் கிழக்கில் செயற்படும் ஊடகங்களை கோரி நிற்கின்றனர். தற்போது கூட தெற்கின் சிவில் சமூக செயற்பாட்டாளர்களால் வடக்கு கிழக்கு மக்களின் போராட்டங்களுக்கு உரிய ஊடகப் பிரசித்தம் தெற்கின் ஊடகங்களால் கொடுக்கப்படுவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப் படுவதில்லை. இவ்விரண்டு வகைப் பிரச்சினைகளையும் ஏற்படுத்திய அடிப்படைக் காரணம் ஒன்றாகவே அமைந்துள்ளது.
காலி முகத்திடல் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டத்தின் பெறுமதி
காலி முகத்திடல் ஆக்கிரமிப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் முறைகள் தொடர்பிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை ஒரு தீவிரமான விடயமாகக் கருதவில்லை, அங்கு பாடல்கள் மற்றும் இசை முழக்கம் என்பன இடம்பெறுகின்றன. அது ஒரு களியாட்டம் போல் உள்ளது. இவ்வாறான கருத்துக்கள் ஆர்ப்பாட்டம் பன்முகத்தன்மை மிக்கதாக நடத்தப்படுவதை புரிந்து கொள்ள முடியாமையினாலேயே முன்வைக்கப்படுகின்றன. மேலும், எந்த ஆர்ப்பாட்டத்திலும் தமது சொந்த நோக்கங்களுக்காக வருபவர்கள் உள்ளடங்குவர் என்ற புரிதல் காணப்படல் வேண்டும். காலி முகத்திடல் ஒரு “களியாட்ட மையமாக” நோக்கப்படுவது போராட்டங்கள் பற்றி மக்கள் கொண்டிருந்த எதிர்மறையான எண்ணங்களை தகர்க்க உதவியிருக்கலாம். விசேடமாக, நடுத்தர வர்க்கத்தினர் வழமையாக வீதிகளில் நடக்கும் போராட்டங்களில் பங்கேற்பதை பொதுவாக விரும்பாத நிலையில், இந்த புதிய முயற்சி அவர்களும் தயக்கமின்றி ஆர்ப்பாட்டங்களில் இணைவதற்கு வாய்ப்பை வழங்கியுள்ளது. கோகோட்டாகம (GotaGoGama/ கோட்டா போ கிராமம்), சமூக மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகள், குடியியல் கடமைகளை நிறைவேற்றுதல், அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கம் போன்ற செயற்பாடுகளை உருவாக்கியுள்ள அதே வேளை, இந்த இடம் பொருளாதார படிநிலை, பால் போன்ற காரணிகளின் அடிப்படையில் அமைந்த சமத்துவமின்மைகளை உருவாக்கும் இடமாகவும் அமையலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, இது இலங்கை சமுதாயத்தின் ஒரு நுண்ணிய பகுதியையே எமக்கு காண்பிக்கின்றது. இவ்விடத்தில நடக்கும் போராட்டத்தை தமது செயற்பாடுகளுக்கு ஒரு தளமாகப் பயன்படுத்தும் நபர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு புலனாய்வுத் தகவல்களை திரட்டும் உளவாளிகள் போன்றோரும் அங்கு காணப்படலாம்.
முக்கியமான நோக்கம் ஒன்றை அடைவதற்காக காலிமுகத்திடலை ஆக்கிரமித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுவது மறுக்க முடியாத உண்மையாகும். ஜனாதிபதி செயலகம் என்பது அதிகாரத்தின் ஆசனமாக அமைந்துள்ளது. முன்னதாக, இவ்விடம் ஊடறுக்கப்பட முடியாததாக அமைந்திருந்தது. எனினும், இந்நாட்டின் உச்ச அதிகாரத்தை கொண்டவரும் ஒரு காலத்தில் இந்நாட்டில் மிகவும் அஞ்சப்பட்ட நபரினால் கூட இவ்விடத்தை தற்போது அணுக முடியாமல் உள்ளது. கொல்லப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுப் படங்கள் அந்த இடத்தில் தொங்க விடப்படும் என எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்: இந்தத் தாக்குதல்கள் மற்றும் கொலைகளில் பெரும்பாலானவற்றுக்கு தற்போதைய ஜனாதிபதியே உத்தரவுகளை கடந்த காலத்தில் பிறப்பித்திருந்தார்.
நாடாளுமன்றம் போன்ற ஏனைய கட்டமைப்புகள் கொண்டிருப்பது போல் இந்த ஆர்ப்பாட்டங்களும் நோக்கம் ஒன்றைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகங்கள் நாடாளுமன்றத்துக்குள் உள்ளன, இவ்வகிபாகங்களை நிறைவேற்றுவதில் அவர்கள் தொடர்ச்சியாக தவறி வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை வகிக்க வேண்டும் என எண்ணுவதை விட்டு விட்டு தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதற்குரிய மன்றமான நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
2006ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையர்கள் கடந்த காலம், நிகழ்காலம் என்பவற்றில் தற்போது உயிருடன் உள்ளவர்களும் இறந்தவர்களும் உள்நாட்டிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக பேசியதை விட தற்போது அதிகமாகப் பேசப்படுகின்றது. இதனை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு, எமக்குள்ள பிரச்சினைகளை நாம் தீர்க்க வேண்டும். செயலிழந்துள்ள அரசியல் கட்டமைப்புகள், நெருங்கியவர்களுக்கும் உறவினர்களுக்கும் முன்னுரிமையளிக்கும் கலாச்சாரம், சிங்கள மற்றும் பௌத்த மயமான அரச முறைமை, அத்துடன் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் பாரபட்சம் என்பன நாம் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகளில் உள்ளடங்குகின்றன. இதனை நாம் செய்யத் தவறுவோமானால், எமது வரலாற்றில் காணப்படும் பல தருணங்களைப் போன்று இதுவும் ஒரு தருணமாக அமைவதுடன் இழக்கப்பட்ட வாய்ப்பொன்றாகவும் வரலாற்றில் பதியப்படும்.
credit to- அம்பிகா சற்குணநாதன் source from maatram media