கொழும்பு மேற்கு துறைமுக கடலில் M.V Xpress Pearl கப்பல் மூழ்கி ஏழு மாதங்களாகின்றன.
இந்த கப்பலில் பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மற்றும் அமில வகைகள் அடங்கிய 81 கொள்கலன்கள் இருந்ததுடன், அதில் 25 டொன் நைட்ரிக் அமிலமும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.
இரசாயனக் கசிவு காரணமாக இந்த கப்பலை பல துறைமுகங்கள் நிராகரித்திருந்தன.
ஆனால் கொழும்பு துறைமுகத்தின் வௌிப்புற துறைமுக வளாகத்திற்குள் நுழைய இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், அது இராசயன கசிவின் காரணமாக தீப்பற்றி எரிந்தது.
இந்நிலையில், கப்பலில் இருந்து தீக்கிரையான கொள்கலன்கள் முற்றாக அகற்றப்பட்டுள்ள நிலையில், தற்சமயம் கப்பலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் மூழ்கியுள்ள கொள்கைகளின் எஞ்சிய பாகங்களை அகற்றும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள, கடலடி ஆய்வு பிரிவான நாராவின் தலைமை அதிகாரியும் விஞ்ஞானியுமான கலாநிதி கே.அருளானந்தம் கள ஆய்விலிருந்து எமது விமீடியா செய்திகளுக்குத் தெரிவித்தார்.
கடலில் மூழ்கியுள்ள கொள்கலன்களில் குறிப்பிட்ட ஒரு கொள்கலன் ஆயிரம் மெற்றிக் டொன் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை கொண்டிருப்பதாகவும் அதனை அகற்றுவதில் பாரிய சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக சுழியோடிகளின் முயற்சியுடன் குறித்த கொள்கலனை திறந்து அதில் தலா 25 கிலோ நிறையுடைய ஒவ்வொரு பிளாஸ்டிக் பைகளையும் வெளியே எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் ஒரு கட்ட நட்டஈடு மாத்திரமே பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதி நட்ட ஈட்டு தொகையை வழங்குவதற்கு கப்பலின் காப்புறுதி நிறுவனம், மதிப்பீட்டு ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாகவும் விரைவில் அம்மீனவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கப்பலின் மூழ்கியுள்ள ஏனைய பாகங்களையும் அப்பகுதியில் இருந்து முற்றாக அகற்றும் பணிகள் எதிர்வரும் மே மாதம் அளவில் தென்மேற்கு பருவ பெயர்ச்சிக்கு முன்பாக முழுமையாக நிறைவடையும் என அவர் வி மீடியா செய்திகளுக்கு தெரிவித்தார்.
அண்மைக்காலத்தில் உலகில் பதிவான மிகப்பெரிய அளவில் கடல் மாசடைந்த சம்பவமாக இது அமைந்தது.எனினும், இந்த பேரழிவிற்காக இதுவரை இலங்கை 3.6 மில்லியன் டொலர்களை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளது என நாராவின் தலைமை அதிகாரியும் விஞ்ஞானியுமான கலாநிதி கே.அருளானந்தம் சுட்டிக்காட்டியிருந்தார்.