கொழும்பு – கல்கிசை-காங்கேசன்துறைக்கு இடையில், குளிரூட்டப்பட்ட புதிய நகர்சேர் கடுகதி தொடரூந்து சேவை நேற்று ஆரம்பமானது. நேற்று அதிகாலை 5.10 மணியளவில், கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடரூந்தானது, நண்பகல் 12.15 மணிக்கு, யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்து, பின்னர் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்குப் பயணமானது.
காங்கேசன்துறையிலிருந்து, பிற்பகல் (1.15 மணிக்கு சேவையை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடரூந்து, இரவு 8 மணிக்கு கொழும்பைச் சென்றடையும். இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன், சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவையானது, நேற்று முதல், மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து, 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது. இதன் மூலம், பயணிகளின் எண்ணிக்கை 360 ஆக அதிகரிக்க முடியுமெனத் தெரிவிக்கப்பட்டது. குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி தொடரூந்தின் முதலாவது சேவையில், உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதேசப் போக்குவரத்து அதிகாரியை , யாழ்ப்பாணம் ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் வரவேற்றார். இந்தியாவின் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ், இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள், நிறுவனமானது இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு, குளிரூட்டப்பட்ட வசதிகளுடனான டீசல் ரயில்கள் இரண்டினை, இலங்கைக்கு வழங்கியது.
அவற்றில் ஒன்றே, வடக்கிற்கான சேவையில், நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடனுதவித்திட்டத்தின் கீழ், மாஹோ முதல் ஓமந்தை வரையிலான, 128 கிலோமீற்றர் ரயில் பாதை சீரமைப்பு, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான, சமிக்கை வலையமைப்பு திட்டம், பொல்கா வலை முதல் குருநாகல் வரையிலான இரட்டை ரயில் பாதைத் திட்டம், உள்ளிட்ட திட்டங்களும், முன்னெடுக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.