கொழும்பு துறைமுக நகரத்திற்கான புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள சர்வதேச வணிகம், கப்பற்றுறை நடவடிக்கைகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வருகை தரவுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய குறித்த தரப்பினர்களுக்குவீசா வழங்கல் மற்றும் அதற்குரிய பணிகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
அதற்கமைய, கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான முதலீட்டாளர் வீசா வகை, சேவை வழங்குநர்களுக்கான சேவை வழங்குநர் வீசா வகை, கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான சீ.பி.சீ. வதிவிட சொத்து குத்தகையாளர் வீசா வகை போன்றவற்றை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்தற்காக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.