கடுமையான துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து, அவரது கடவுச் சீட்டை கைப்பற்றுமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோட்டாபய மீதான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சிங்கப்பூர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன் என சிங்கப்பூர் சட்டமா அதிபர் லூசியன் வோங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் எலியட் கோல்பர்ன் வலியுறுத்தியுள்ளார்.
ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் இப்போது பிரித்தானியாவில் வசிக்கின்றனர். அவர்களிடம் சாட்சியங்களைப் பெற என்னால் முடிந்தவரை உங்களுக்கு உதவ முடியும் எனவும் அக்கடிதத்தில் எலியட் கோல்பர்ன் குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்யக்கோரி, சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தைச் (I-T-)-P) சேர்ந்த சட்டவாளர்கள் குற்றவியல் முறைப்பாடு ஒன்றினைச் சமர்ப்பித்துள்ள நிலையில் பிரத்தானிய எம்.பியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.