கோத்தாபயவின் விசா காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு-சிங்கப்பூர் அரசு அனுமதி

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டங்களையடுத்து இரண்டு வாரங்களுக்கு முன்பு தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசா காலம் சிங்கப்பூர் அரசினால் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டதை அடுத்து அப்போது ஜனாதிபதியாகவிருந்த கோத்தாபய ராஜபக்ஷ மாலைதீவுக்கு சென்றார். ஜூலை 14 ஆம் திகதி, மாலைதீவில் இருந்து சவுதி விமானத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வந்த கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசினால் 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது.

சிங்கப்பூர் வந்த சிறிது நேரத்திலேயே, அவர் தனது ஜனாதிபதி பதவியை இராஜிநாமா செய்தார். இந்நிலையில் கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட விசா காலம் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது என சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு பொதுவாக 30 நாட்களுக்கு பயண அனுமதி வழங்கப்படுவது நடைமுறையாகவுள்ளது.

Spread the love