கோப் என்றழைக்கப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கோப் குழுவின் தலைவர் தெரிவுக்கான கூட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போது, அதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மேலதிக வாக்குகளால் ரஞ்சித் பண்டார தெரிவாகியுள்ளார்.
ஆளும் கட்சி சார்பில் ரஞ்சித் பண்டாரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன அதனை வழிமொழிந்தார். அத்துடன், எதிர்க்கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்னவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார விஜேரத்ன இதனை வழிமொழிந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ரஞ்சித் பண்டாரவுக்கு 15 வாக்குகளும், இரான் விக்ரமரத்ன வுக்கு 07 வாக்குகளும் அளிக்கப்பட்டன.