21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக முறையாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கட்சித்தலைவர்கள் பலர் கருத்துத்தெரிவித்த நிலையில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அல்லது அரசாங்க ஊழியர்களினால் சட்டவிரோதமாகச் சம்பாதித்த வெளிநாட்டு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்டிருப்பதாக வெளியாகும் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு ஏதுவான வகையில் சட்டங்களைத் திருத்துதல், இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு மற்றும் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவதை தடுக்கும் திருத்தம் போன்ற பல்வேறு முன்மொழிவுகள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுத்த சபாநாயகர் அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக பொதுமக்கள் எதிர்பார்க்கும் நலன்களுக்காக முன்னுரிமை வழங்கும் வெளிப்படைத்தன்மை கொண்ட, ஊழலற்ற செயல் திறன்மிக்க ஆட்சிமுறையொன்றை ஏற்படுத்தும் நேர்மையான நோக்கத்துடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தின் நேரடி தலையீட்டுடன் எதிர்காலநடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள இந்தப் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பையும் முழுமையான ஆதரவையும் கட்சி பேதங்களின்றி எமது தாய்நாட்டின் எதிர்காலத்துக்கு தேவையான நடவடிக்கைகளை இனிமேல் மேற்கொள்ள உறுதி செய்யவேண்டும் என சட்டவாக்கத்தின் சபாநாயகர் என்ற வகையில் நான் மிகப்பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.