சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 47 பேர் நாட்டின் மேற்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியத்தில் நீண்டநாள் மீன்பிடி படகொன்றை நேற்றிரவு சோதனைக்குட்படுத்திய போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவர்களில் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய ஐவரும் 34 ஆண்களும் 6 பெண்களும் 7 சிறுவர்களும் உள்ளடங்குவதாக கடற்படை கூறியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வென்னப்புவ, நாத்தாண்டிய, சிலாபம் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த 1 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திலிருந்து படகு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.