நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் மிக மோசமான நிலையில் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது. சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் டொலர் பற்றாக்குறை தாக்கம் செலுத்துகிறது. இந்தநிலையில் இன்று முதல் முகக்கவசங்களின் விலையை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.