இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, 13 ஆவது மற்றும் 16 ஆவது திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடுக்கவேண்டும் என்று இந்திய உள்ளிட்ட சர்வதேசத்திடம் ஒன்றுபட்டுக் கோருவதற்கு தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரைச் சந்திக்கவும் அவை முடிவு செய்திருக்கின்றன.
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கிடையே நேற்று கொழும்பில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரெலோ இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைத் திருந்தது. பம்பலப்பிட்டி, க்ளோபல் டவர் விடுதியில் நடந்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன். ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர். இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ பிரதிநிதித்துவப்படுத்தி க.சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறும் வரை- சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கம் முழுமையாக நடைமுறையாகும் வரை – அதன் முதல்படியாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் வாக்களித்த 13 ஆவது மற்றும் 16ஆவது திருத்தங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்தபடிமுறையாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தைக் கோருவது என்று தமிழ்க் கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன. அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் ஒன்றுபட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பது என்றும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரைச் சந்திப்பது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் கொழும்பில் சந்தித்துப்பேசுவது என்றும், அன்று கூட்டுத் தீர்மானம் ஒன்றில் கையெழுத்திடுவது என்றும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.