சமுர்த்தி வங்கிகளை ஒழுங்குபடுத்துவதற்கு நம்பகமான வெளிப்படையான அமைப்பை உருவாக்குவது குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
‘அஸ்வெசும’ நலப் பலன்கள் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவித் தொகைகள் பெறுவோரின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். கடந்த வாரம் பாராளுமன்றம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்ததையடுத்து, ஜூலை 1ஆம் திகதி முதல் புதிய திட்டம் அமுல்படுத்தப்படும்.
இதன்படி, எதிர்காலத்தில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கான அரச நிதி சமுர்த்தி வங்கிகளின் ஊடாக செலுத்தப்படாது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சேமசிங்க, சமுர்த்தி வங்கிகள் வெறுமனே நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக செயற்பட முடியாது எனவும், பரந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பஸ்குவல் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் பல அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இடையில் மற்றுமொரு சுற்று கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் முதன்மை நோக்கமும் பொறுப்பும் என இச்சந்திப்பின் போது பங்கேற்பாளர்கள் சுட்டிக்காட்டினர். சமுர்த்தி வங்கி முறையை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் சமூகத்தை வலுவூட்டும் வகையில் செயற்பட வேண்டும் எனவும், எதிர்காலத்தில் அதிகாரமளித்தலின் அடிப்படையிலேயே நிறுவனத்தின் செயற்பாடுகள் அளவிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். சமுர்த்தி திணைக்களத்தில் உள்ளவர்களின் வேலைகள் தொடர்பிலும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி வங்கிகள் கைவிடப்படமாட்டாது எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சமுர்த்தி வங்கி முறைமையை ஒழுங்குபடுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டியதோடு, அதற்கான செயற்பாடுகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இதன்படி, நிதியமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகியவற்றின் கூட்டுக் குழுவொன்று தேவையான ஒழுங்குமுறை முறைமை தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளது.