சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போது இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதால் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை நாடுமாறு பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அது தொடர்பில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ளமையினால், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இவ்வேளையில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்து அமைச்சர்கள் சிலர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில், மேலும் சில அமைச்சர்கள் அவ்வாறு அதன் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டால் அதன் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிவரும் என்றும் இதனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லாது நட்பு நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். இவ்வாறான நிலைமையில் சர்வதேச நாணய நிதித்திற்கு செல்வதா? இல்லையா? என்பது குறித்து அமைச்சரவையினால் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை .