சர்வதேச நியதிகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச்சட்டம் திருத்தப்படுகின்றது என்று தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
புதுடில்லியை தளமாகக் கொண்டுள்ள இராஜதந்திரப் படையினருக்கு மத்தியில் உரையாற்றிய போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் 83 தூதுவர்கள் கலந்து கொண்டனர். பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப்படியாகும். பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும். 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருகின்றது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கணிசமான திருத்தங்களில் தடுப்புக்காவல் உத்தரவுப் பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், கட்டுப்பாட்டு ஆணைகள், உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல், நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்த்துவைத்தல், கருத்துச் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச்செய்தல், நீதிவான்கள் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரிகளின் அணுகலுக்கான விதிகளை அறிமுகப்படுத்துதல், தடுப்புக்காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளை தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்ளும் உரிமை, நீண்டகால கைதிகளுக்கு பிணை வழங்குதல், வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற அம்சங்கள் உள்ளடங்குகின்றன என்றார்.