சர்வ கட்சிக் கூட்டத்தில் 13 ஐ முழுமையாக அமுலாக்கி சமஷ்டி நோக்கி நகர வேண்டும் 

இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு அவசியம் என ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது தமிழ் தேசியக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் ஆரம்பமானது.

சுமார் இரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் பிரதமர் திணேஷ் குணவர்த்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன், பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்த ராஜபக்ச, ஈழமக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்
தேவானந்த, மனோ கனேசன் , பழனி திகாம்பரம், வே.இராதா கிருஸ்ணன், ஸ்ரீலங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் ரவூப் ஹக்கீம், அகில இலங்கைமக்கள் காங்கிரஸின் ரிசாத் பதியூதீன், லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸவிதாரன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி. அங்கஜன் இராமநாதன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கு கொண்டிருந்தனர்.

இதன்போது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் அதேநேரம் மாகாண சபை தேர்தலை நடத்துதல், காணி விடுவிப்பு, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு குறித்து வலியுறுத்தியதுடன் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விடயத்துக்கு நீதியான விசாரணை தேவையெனவும் தெரிவித்தார். இந்த விடயங்கள் அனைத்தும் சமாந்திரமாக நடைபெற வேண்டு மெனவும் ஜனவரி 31இற்கு முன்னர் இவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார். இந்நிலையில் ஜனாதிபதி அமைச்சர்அலி சப்ரி மற்றும் விஜயதாஸ ராஜபக்ச இவை தொடர்பாக விளக்குவார்கள் என கூற அவர்கள் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல் போனோர் விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினர்.

இதையடுத்து ஜனாதிபதி இவை குறித்து தொடர்ந்து தமிழ் கட்சிகளுடன் பேசுவதாக தெரிவித்தார். இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸா பேசுகையில் அரசியல் தீர்வு காண்பது அவசியமானதெனவும் ஒருமித்த நாட்டில் பிளவு படாத வகையில் தீர்வு காணப்பட வேண்மென குறிப்பிட்டார். இந்நிலையில் தீர்வில் வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாது மலையக மக்களையும் உள்ளடக்கப்பட வேண்டுமென மனோ கணேசன் தெரிவித்தார். இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பினர் பங்கு கொள்ள வில்லை.

Spread the love