சீனா எமது உயிர்த்தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என்று தெரிவித்துள்ளார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற இறப்பர் அரிசி ஒப்பந்தத்துக்கு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையை முன்னிட்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ பங்கேற்புடன் கொழும்பு துறைமுக நகரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது சீனா நமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை. முன்பு இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அப்போதைய பிரதமர் சௌசன்லாய் இலங்கைக்கு தேவையான உணவுப் பொருள்களை அனுப்பி மிகவும் மதிப்பு மிக்க செய்தியை அனுப்பினார். ‘உங்களுக்கு தேவையான உணவுப் பொருள்களை நீங்களே உற்பத்தி செய்துகொள்ளுங்கள். அதுவே சுதந்திரத்துக்கான வழி. நாம் அந்தப் பாதையைக் கடைப்பிடித்தோம். இன்று முழு உலகமும் ஏற்றுக்கொள்ளும் இயற்கை விவசாயத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். கொரோனாத் தொற்றால் அது தடைப்பட்ட போதிலும், முழு உலகுக்கு ஒரு முக்கிய முன்மாதிரியாக விளங்கவே முயற்சித்தோம். 2013 ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கைக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் பிரேரணையை முன்வைத்த காலமும் எனக்கு நினைவிருக்கிறது. பெரிய வல்லரசாக சீன அரசு எங்களுக்காக முன்நின்றது. அது எமது நாடு போன்று ஆசிய நாடுகளின் சுதந்திரத்துக்காக சீனா செய்த மாபெரும் தியாகம் என்றுதான் கூற வேண்டும். சீனா கொரோனாத் தொற்றுநோயை மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தி உலகுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. விரைவில் தடுப்பூசியை உருவாக்கி உலகுக்கு தைரியம் அளித்தனர். முதல் சுற்றிலேயே சீனத் தடுப்பூசியை நாங்கள் நம்பியிருந்தோம். சீன அரசாங்கமானது எமக்கு செய்ததைப் போன்றே, நாடுகளின் சுதந்திரத்துக்கு மதிப்பளித்து உதவி செய்கிறது. நிபந்தனைகளை விதித்து தலையிடும் கொள்கை சீனாவிடம் இல்லை. எங்களைப் போன்ற நாடுகள் அத்தகைய கொள்கையையே எதிர்பார்க்கின்றன என்றார்.