சுகாதார தரச்சான்றிதழ் கிடைக்காமையால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட இந்திய முட்டைகளை விடுவிப்பதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக அரச பல்நோக்கு வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் பேக்கரி மற்றும் பாரிய அளவிலான ஹோட்டல்களுக்காக 35 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்காக கடந்த சனிக்கிழமை 10 இலட்சம் முட்டைகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
அதன் மாதிரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட போதிலும், இதுவரை அதன் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படவில்லை என அரச பல்நோக்கு வணிகக் கூட்டுத்தாபனம் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையில் சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக குறித்த முட்டைகளை பேக்கரி மற்றும் ஹோட்டல்களுக்கு வழங்க முடியாது போயுள்ளது.
இது தொடர்பில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி ஹேமாலி கொத்தலாவலவிடம் வினவிய போது, குறித்த அறிக்கையை நாளை(13) வௌியிட முடியும் என குறிப்பிட்டார்.
முட்டை விலையை கட்டுப்படுத்துவதன் ஒரு கட்டமாக இந்தியாவில் இருந்து இதற்கு முன்னர் 2 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதுடன், குறித்த முட்டைகள் சுகாதார தரப்பினரின் சான்றுப்படுத்தலுக்கு அமைய விற்பனை செய்யப்பட்டுள்ளன.