டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்சமயம் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. ஆம் ஆதாமி கட்சியிடம் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ், கோவாவில் வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றது.
சுமார் ஒன்றரை ஆண்டுகளாகப் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்த உத்தரப் பிரதேசத்தில் வெறும் 2 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வென்றுள்ளது. அதேபோல உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான்.
அனைத்தையும் காட்டிலும் 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் கணிசமாகக் குறைந்துள்ளது. காங்கிரஸின் வாக்கு வங்கியானது பிரிக்கப்பட்டது, அதாவது திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுக்குப் பிரிந்துள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தோல்வியானது காங்கிரஸினது தலைமை குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த தோல்விக்குப் பின்னர், அதிருப்தி தலைவர்களாக அறியப்படும் ஜி23 தலைவர்கள் மாற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றே கூறியுள்ளனர்.
இந்தச் சூழலில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சோனியா காந்தி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அம்பிகா சோனி உள்ளிட்ட 56 பேர் கலந்து கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், கட்சிக்கு முழு நேரம் செயல்படும் வகையில் தலைவர் வேண்டும் என்றும், அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த காங்கிரஸ் உட்கட்சி தேர்தல், 5 மாநில தேர்தல் முடிவுகளால் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேரு குடும்பத்தினருக்கு எதிராக ஒரு தரப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ள போதிலும், அசோக் கெலாட், டி கே சிவகுமார் போன்ற மற்றொரு தரப்பினர் ராகுல் காந்தியே தலைவர் பதவிக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் காணொலி வாயிலாகவே நடைபெற்ற நிலையில், இப்போது சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் செயற்குழு கூட்டம் நேரடியாக நடைபெறுகிறது. இதில் 5 மாநில தேர்தல் முடிவுகள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.