எரிபொருள் விலை குறைந்துள்ளதன் பயனை 24 மணித்தியாலங்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பஸ் கட்டணம் 12.9 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பதில் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், டீசல் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
34 ரூபாவாக இருந்த குறைந்த பஸ் கட்டணத்தை 30 ரூபாவாக குறைப்பதற்கும், ஏனைய பஸ் கட்டணங்களை 12.9 வீதத்தால் குறைப்பதற்கும் இந்த பஸ் கட்டண திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் கட்டண திருத்தத்துடன், அரச மற்றும் தனியார் பஸ்கள், அதி சொகுசு மற்றும் சொகுசு பஸ்களின் கட்டணங்களும் குறைக்கப்படவுள்ளதுடன், முச்சக்கர வண்டிகள், வாடகை வண்டிகள் மற்றும் பாடசாலை பஸ்களின் கட்டணங்களும் குறைக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.