ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப்பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரமி நிலேப்னா ரணசிங்க என்ற தொகுப்பாளர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விமர்சிக்கும் பதிவொன்றை தனது தனிப்பட்ட முகநூலில் பகிர்ந்தமைக்காக தொலைக்காட்சி தொகுப்பாளினி இடைநீக்கம் செய்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தொலைக்காட்சி தொகுப்பாளரின் இடைநிறுத்தம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. எவ்வாறாயினும், பரமி நிலேப்னா ரணசிங்கவை பணி இடைநிறுத்தம் செய்ய இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) எடுத்த தீர்மானத்தை சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது.
இது கருத்து சுதந்திரம் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளரின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என அந்த இயக்கம் கூறியுள்ளது. இது இலங்கையில் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் அப்பட்டமான முயற்சி என சுதந்திர ஊடக இயக்கம் மேலும் தெரிவித்துள்ளது.