முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, ஜூலை 8 அன்று, தனது 67 வயதில் தனது அரசியல் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். செப்டம்பர் 27 அன்று நடைபெறும் அபேயின் இறுதிச் சடங்கில் ஜப்பான் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜப்பானுக்கான விஜயத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கும் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 29ஆம் திகதி பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஜயத்தின் போது பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது விஜயங்களை முடித்துக் கொண்ட ஜனாதிபதி எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.