ஜனாதிபதி தலைமையில் வழங்கப்பட்ட வடக்கில் மீள்குடியேற்றப்படும் காணி உறுதிப்பத்திரங்கள், மீள்குடியேற்ற கொடுப்பனவுகள்

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்றக் கொடுப்பனவாக தலா 38,000 ரூபா வீதம் வழங்கப்படும் காசோலைகள் என்பவற்றைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  (11) முற்பகல் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய, யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்பட்ட வடக்கில் உள்ள காணிகளை அதன் உரிமையாளர்களான பொது மக்களிடம் மீள ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் காணி உறுதிப் பத்திரங்கள் மற்றும் காசோலைகளை கையளிக்கும் அடையாள நிகழ்வு நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. கடந்த 33 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் தமது காணிகள் மீளக் கிடைத்ததையிட்டு ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்தனர்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வட மாகாணத்துக்கான ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எம்.இளங்கோவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Spread the love