ஜனாதிபதி தெரிவிற்கு ஜூலை 19 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் 

ஜனாதிபதி பதவிக்காக நால்வரின் பெயர்கள் இதுவரை முன்மொழியப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி தெரிவு தொடர்பில் கட்சிகள் மற்றும் கூட்டமைப்பிற்கு இடையில் கருத்து முரண்பாடுகள் ஆரம்பித்துள்ளன.

புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளமை தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் இன்று சபையில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது.

கோட்டாபய ராஜகபக்ஸவின் இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இதன்போது சபையில் வாசித்தார். பின்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடைமுறை தொடர்பிலும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தௌிவுபடுத்தினார்.

இன்று முதல் 7 நாட்களுக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதனால், எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாக உள்ள ஜனாதிபதியின் எஞ்சிய காலத்திற்கு புதிய ஜனாதிபதி ஒருவரை ஒரு மாதத்திற்குள் தெரிவு செய்ய வேண்டும் என்பதுடன், அதனை இரகசிய வாக்கெடுப்பு மூலமே மேற்கொள்ளவேண்டும். இந்த வாக்களிப்பின் போது சபாநாயகரும் வாக்களிக்க முடியும்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்படுவார். வேட்புமனு கையளிக்கப்படும் தினத்தில் அந்த வேட்பாளர் அன்றைய தினம் கட்டாயமாக சபையில் இருக்க வேண்டும். ஒருவருடைய பெயர் மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டால் வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதி தெரிவு இடம்பெறும்.

ஒருவருக்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் பிரகாரம், எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

Spread the love