பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட குழு விவாதத்தில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாடு ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய நெருக்கடிக்கு தீர்வு காண வடக்கு மற்றும் தெற்கு நாடுகளுக்கு இடையே ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சியில் ஒரு புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பலதரப்பு வளர்ச்சி வங்கிகளின் சீர்திருத்தம், கடன் நெருக்கடி, புதுமையான நிதியுதவி, சர்வதேச வரிகள், மற்றும் நாடுகள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள்: இந்த உச்சிமாநாடு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வாய்ப்பாக இருக்கும்.
இதன்படி, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்த வார இறுதியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார். ஜனாதிபதி தனது ஐரோப்பிய விஜயத்தின் போது பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் கடன் மறுசீரமைப்பு செயல்முறை குறித்தும் கலந்துரையாடுவார்.