ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர், தூதுவர் சஞ்சீவ் குணசேகர இடையே சந்திப்பு

தூதுவர் சஞ்சீவ் குணசேகர, ஜப்பானின் பாராளுமன்ற துணை வெளிவிவகார அமைச்சர் ஹோண்டா டாரோவை சந்தித்தார். மேலும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கை மற்றும் ஜப்பான் இருதரப்பு உறவுகள் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இரு நாட்டு மக்களுக்கும் இடையே உள்ள வலுவான நட்புறவை நினைவுகூர்ந்த துணை அமைச்சர், தூதுவர் தனது பதவிக்காலத்தில் குறிப்பாக மக்களுக்கு இடையே பிணைப்பை ஏற்படுத்துதல், முதலீடுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், ஜப்பான் அரசாங்கத்தால் இலங்கை மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியமை தொடர்பான விசேட குறிப்புடன் சுகாதார இராஜதந்திரத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டினார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து துணை அமைச்சருக்கு விளக்கமளித்த தூதுவர், இலங்கை மக்கள் மீதான இந்த நெருக்கடியின் சவால்களைத் தணிக்க அரசாங்கத்தின் ஆதரவைக் கோரினார். இலங்கை மக்களுக்கான உணவுகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுக்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை ஜப்பான் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியமைக்கு நன்றி தெரிவித்ததோடு, இலங்கையின் தேவைப்படும் நேரத்தில் உதவுவதற்கு ஜப்பான் மற்றும் ஏனைய நன்கொடையாளர்களுக்கு மேலும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குமாறு அழைப்பு விடுத்தார். ஜப்பான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்த பொருளாதார நெருக்கடியால் சாதாரண மக்கள் மீது ஏற்பட்டுள்ள பாதிப்பால் வருத்தப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான உரையாடலை விரைவுபடுத்துமாறும், கடனை வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய மறுகட்டமைப்பை நோக்கிச் செல்லுமாறும் துணை அமைச்சர் டாரோ அறிவுறுத்தினார்.

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடியான நிலைமை காணப்படுவதாகவும், பொருளாதார நிலைமையை படிப்படியாக மேம்படுத்த புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கம் நிலையான தீர்வைக் கொண்டுவரும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தணிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச பங்காளிகளின் ஆதரவுடன் இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு உட்பட இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து துணை அமைச்சருக்குத் தூதுவர் குணசேகர தெரிவித்தார்.

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு 70 வருடங்கள் நிறைவடைந்ததைக் குறிப்பிட்ட தூதுவர், தனது பதவிக்காலத்தில் ஜப்பானிய பங்களிப்பின் ஊடாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு சிறந்த ஆதரவை வழங்கியுள்ளதாகவும், இந்த இக்கட்டான தருணத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு இருதரப்பு மற்றும் அதன் நட்பு நாடுகள் மூலம் உதவுவதற்கு ஒரு ஊக்கியாக ஜப்பான் செயற்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Spread the love