பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கத் தவறியதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் (G.S.P) ஏற்றுமதி வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் நேற்று எச்சரித்தார்.கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் குழுவொன்றைச் சந்தித்த போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
இலங்கை சிறந்த ஏற்றுமதி வருவாயை ஈட்டுவதற்கும், அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உதவியது. இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏற்படும் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டே இலங்கைக்கு தொடர்ந்து வரிச்சலுகைகளை வழங்குவது குறித்துத் தீர்மாளிக்கப்படும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலாவன் டெர்லேயன் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிவித்தார்.
26 வருட உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்களை எதேச்ச திகாரமாக தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது. எனினும் மாறி-மாறி வந்த இலங்கை அரசாங்கங்கள் கருத்து வேறுபாடுகளை கொண்டவர்களை அடக்குவதற்கு பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இனியும் பயங்கரவாத தடைச் சட்டத்தை அதே நிலையில் தொடர்ந்தால் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகச் சலுகையை இழக்கும் அபாயம் உள்ளது எனவும் இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் எச்சரித்தார். பயங்கரவாத தனிச்சட்டத்தைச் சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது. எனினும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் தற்போதுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஜி.எஸ்.பி. பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை இழந்தால் அது இலங்கைக்கு மேலும் பெரும் நெருக்கடியாக மாறும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எந்தவொரு சட்டப்பூர்வ அனுமதியும் இன்றி எவரையும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைக்கும் ஏற்பாட்டை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறது. நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் தனிநபர்களை காலவரையறையின்றி காவலில் வைக்க அனுமதிக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இரத்துச் செய்யப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக, போரின் போது இச்சட்டத்தின் கீழ் குறி வைக்கப்பட்டதால் இந்தச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று சிறுபான்மைத் தமிழர்கள் மட்டுமே கோரினர். எனினும் கடந்த ஆண்டு ஜூலை தெற்கில் சிங்கள் பெரும்பான்மையினரிடமிருந்தும் அதே கோரிக்கை எழுந்துள்ளது. பௌத்தபிக்கு உட்பட இரண்டு மாணவர் தலைவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு அரசுக்கு எதிரான போராட்டங்களை நசுக்கியதாக குற்றம் சாட் டப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னோடியில்லாத வகையில் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டங்களை தடுக்க பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தினார் எனவும் ஜேர்மனி தூதுவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதில் தேசிய பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் அதற்கான காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் எனவும் இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஹோல்கெர் சியுபோட் தெரிவித்தார்.