ஜெனிவாவை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை அரசு

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக கொழும்பை தளமாகக் கொண்ட வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்தித்து நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சந்திப்பில் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் நிதிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் பங்கேற்று இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தனர்.

அரசியலமைப்புக்கு அமைவாக ஜனநாயக ரீதியான பதவி மாற்றங்கள் உட்பட இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து அலி சப்ரி கோடிட்டுக் காட்டினார். சில உடனடி சவால்களை எதிர்கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் அவர் விளக்கினார். சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்தும் இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறினார்.


மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை உறுதி செய்வதற்கும் ஏற்றத்தாழ்வுகளைத் தடுப்பதற்கும், தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை தணிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.


அண்மைய ஆண்டுகளில் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடி நிலவியபோதிலும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மனித உரிமைகள், நீதி மற்றும் சமத்துவம் தொடர்பான விடயங்களில் மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் ஒருமித்த கருத்தை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. மனித உரிமைகள் பேரவையுடனான தனது ஆக்கபூர்வமான ஈடுபாட்டை எதிர்வரும் 51 ஆவது அமர்வில் இலங்கை தொடரும் எனவும் இராஜதந்திரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.

 

Spread the love