ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை (UNHRC) அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை நாடியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிரேசேன அமரசேகர (Siresena Amarasekara), மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து தென்னாபிரிக்காவின் அரச அதிகாரிகள் மற்றும் தென்னாபிரிக்காவிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள பிற நாடுகளின் தூதுவர்களுடன், கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டங்களில், உயர்ஸ்தானிகர் அமரசேகர, வெளி தரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறையை விட, உள்நாட்டு சமூக, அரசியல் சூழலுக்கு ஏற்ப, முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான உள்ளக பொறிமுறையின் முக்கியத்துவத்தை அவர்களிடம் வலியுறுத்தினார்.
இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, வெளியாரின் தலையீடு இனப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இனப்பிரசனையைத் தீர்ப்பதற்கான விருப்பமும், ஆற்றலும், அதிகாரமும், இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால் வெளிநாடுகளின் தேவையற்ற தலையீடு காரணமாக, சிக்கலைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ளும் அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டு, அதன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கப்படுகிறது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோதலின் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, தன்னிடமுள்ள சொற்ப வளங்களையும் அரசாங்கம் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சர்வதேச பங்காளர்கள் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளில் உண்மையாக அக்கறை காட்டுபவர்களானால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
(இனப்பிரசனைக்கு) தீர்வைக் காண்பதற்கு, அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுமாறு அழுத்தக் குழுக்களை (Pressure groups) ஊக்குவிப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் (இலங்கைக்கு எதிராக) தீர்மானத்தைக் கொண்டு வரும் நாடுகளின் கடமையாகும். மேலும், இலங்கையில் பல்வேறு இனங்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைக்க அச் செயற்பாடு உதவுவது என்றும் அவர் மேலும் கூறினார்.