இந்தியாவைச் சேர்ந்த பகவானி தேவிதாகர் என்பவர், தனது 94 வயதில் வெளிநாட்டிற்கு சென்று, விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெற்றி வாகை சூடி தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார். பின்லாந்தில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்காக விளையாடிய அரியானாவைச் சேர்ந்த பகவானி தேவி, தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் வென்று, 94 வயதில் உலகிற்கே ஒரு உத்வேகம் அளித்துள்ளார்.
பின்லாந்தின் தம்பேரில் கடந்த திங்களன்று நடைபெற்ற 100 மீற்றர் ஸ்பிரிண்ட் போட்டியில் பகவானி 24.74 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இதுதவிர குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றார். இந்நிலையில் டெல்லி விமானநிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இது குறித்து 94 வயதான பகவானி தேவி தாகர் கூறுகையில், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வேறொரு நாட்டில் பதக்கங்களை வென்று என் நாட்டை பெருமைப்படுத்தியிருக்கிறேன் என்றார். முன்னதாக அவர் டெல்லி மாநில தடகள சம்பியன்ஷிப்பில் 100 மீற்றர் ஸ்பிர்ண்ட் ஓட்டம், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.