இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் பிணை மறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி அவர் தொடர்ந்தும் பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்திற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, யுவதியொருவர் மீது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
சிட்னியின் கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி ஒருவரால் செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை முறைப்பாடு தொடர்பில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு பொலிஸ் பிராந்திய கட்டளையின் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவை சிட்னி நகர பொலிஸார் பரமட்டா பொலிஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுக்கப்பட்டிருந்தது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் இவ்வாறு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அவரை எந்தத் தேர்வுக்கும் கருத்தில் கொள்ளப்போவதில்லை என இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.