தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

“21 ஆம் நூற்றாண்டில் செயல் திறன் மிக்க தபால் சேவையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், தபால் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி அதன் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்வரும் சில மாதங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற தபால் திணைக்களத்தினால் அஞ்சல் குறியீட்டு விபரக்கொத்து வெளியீட்டு நிகழ்வில் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இவ்வாறு குறிப்பிட்டார். இந்த விபரக்கொத்தில் ஒவ்வொரு அஞ்சல் அலுவலகத்திற்கும், உப அஞ்சல் அலுவலகத்திற்கும், ஒரு குறியீட்டு எண் குறிக்கப்பட்டுள்ளன. இதனூடாக கடிதங்கள் மற்றும் பொருட்களை விநியோகிப்பதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில், நாடளாவிய ரீதியில் 654 அஞ்சல் அலுவலங்களும், 3,410 உப அஞ்சல் அலுவலகங்களும் காணப்படுகின்றன. இந்த அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கடித பரிமாற்றம் மேற்கொள்ளப்படுவதில்லை. சில அஞ்சல் அலுவலகங்கள் பொருட்களை மாத்திரமே பரிமாற்றம் செய்கின்றன. மேலும் இந்த அஞ்சல் குறியீட்டு விபரக்கொத்து மூலம் முகவரிகளை கண்டுபிடிப்பதில் உள்ள சிரமங்களும் தவிர்க்கப்படும் என்றும் தபால் மா அதிபர் தெரிவித்தார். இந்த விபரக்கொத்தின் முதல் பதிப்பு 1996 ஆம் ஆண்டு முதலாவதாக வெளியிடப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு இவ்வருடம் அச்சிடப்பட்டு, அதன் முதல் பிரதி வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love