தமிழ் அமைப்புகள் மீதான தடையால் 2,400 மில்லியன் டொலரை இழந்த இலங்கை அரசு 

2014 முதல் 2021 வரையிலான காலப் பகுதியில் ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகள் மற்றும் 317 தனி நபர்களுக்கு இலங்கை அரசுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை காரணமாக, இலங்கை வருடாந்தம் 300 மில்லியன் முதல் 500 மில்லியன் டொலர்களிற்கு மேல் இழந்துள்ளது என உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 2014 முதல் தடையும், தடைநீக்கமும் தொடர்கிறது. நாங்கள் தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும், 2015 பொறுப்புக் கூறும் தீர்மானம் குறித்தும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம். 2014 இல் என்னையும் உலக தமிழர் பேரவையையும் தடை செய்தார்கள், 2015 இல்  தடையை நீக்கினார்கள் 2021 இல் மீண்டும் தடை விதித்தார்கள், 2022 இல் தடையை நீக்கியுள்ளனர். தமிழ் பேசும் மக்களின் நியாயப்படுத்தக்கூடிய அபிலாசைகளை அடைவது குறித்தும் 2015 பொறுப்புக்கூறும் தீர்மானம் குறித்தும் நாங்கள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒவ்வொரு தடவையும் ராஜபக்சாக்கள், அது மகிந்தவாகயிருந்தாலும் சரி கோட்டாபயவாயிருந்தாலும் சரி தங்கள் சீற்றத்துடனான எதிர்வினைக்காக எங்களை தடை செய்வார்கள். அதன் பின்னர் எந்த அரசாங்கமோ இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த முற்போக்கானவர்கள் உட்பட சர்வதேச அமைப்போ பரந்துபட்ட ஊடகங்களோ இந்த தடையை அங்கீகரிக்க வில்லை என்பதை பின்னர் உணருவார்கள்.

அதன் பின்னர் மனித உரிமை பேரவையின் அமர்விற்கு முன்னர் ஆட்சியில் உள்ளவர்கள் எங்கள் மீதான தடையை நீக்குவார்கள் 2014 முதல் இது இடம்பெறுகின்றது. சர்வதேச சமூகமும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் அடங்கிய பங்குதாரர்களும் இந்தத் தடையின் அர்த்தத்தை புரிந்துகொண்டு அதனை அலட்சியம் செய்தமைக்காக உலக தமிழர் பேரவை நன்றியுடையதாக உள்ளது. 2014 முதல் 2021 வரையிலான இந்த தடை காரணமாக இலங்கை இழந்த அந்நிய செலாவணி குறித்து நாங்கள் மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளோம் வருடாந்தம் 300 மில்லியன் முதல் 500 மில்லியன் டொலர்களிற்கு மேல் இலங்கை இழந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கமல்குணரட்ண, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மோசமான பயங்கரவாத நிபுணர் ரோகன் குணரட்ண ஆகியோர் இந்த இழப்பிற்கான காரணத்தை ஏற்கவேண்டும். தன்னிச்சையான முடிவுகளிற்காக அவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும், இந்த தடைகளால் என்ன பயன் ஏற்பட்டது என்பதை அவர்கள் தெரிவிக்கவேண்டும். தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்யும் நடவடிக்கை முழுவதும் தன்னிச்சையானது. அர்த்தமற்றது இது, இலங்கைக்குள் மாத்திரமல்ல சர்வதேச அளவில் உடன்பட மறுத்தலை கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கமாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love