ஜனாதிபதியினால் அண்மையில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் சிலர் தமது தண்டனை காலத்துக்கு மேலாக பல வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று தேசிய சமாதான பேரவை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய சமாதான பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதிக்குரிய பொதுமன்னிப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியல் கைதிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் மூன்று பேர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் தண்டனை அனுபவித்து வந்தவர்களாவர். எவ்வாறாயினும், விடுவிக்கப்பட்ட எட்டு கைதிகளில் நால்வர் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை விட நீண்ட காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பதை ஜனாதிபதி செயலகம் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒப்புக்கொண்டுள்ளது. விடுவிக்கப்பட்டவர்களில் மூன்று கைதிகளுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெற்றிருந்தனர்.
எனினும், மற்றுமொரு கைதிக்கு நீதிமன்றினால் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் 14 ஆண்டுகள் சிறைவாசம் இருந்துள்ளார். இன்னுமொருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் 14 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். அவ்வாறே, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை இருந்த இரண்டு கைதிகளும் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றவர்களில் அடங்குவர். சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளின் அடிப்படையில் இது ஒரு பாரிய மனித உரிமை மீறல் என்றும், அவர்களை இவ்வாறு நீண்ட காலமாக சிறையில் வைத்திருந்தமை ஒரு சகிக்க முடியாத அதிகார துஷ்பிரயோகமாகும். இவர்கள் மீண்டும் வாழ்க்கை அனுபவிக்கக்கூடிய, குடும்பங்களைக் கொண்ட மனிதர்கள். அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கு அப்பாற்பட்ட சிறைவாசத்தின் கொடூரத்தை எதிர் கொள்ளக்கூடாது.
இலங்கையில் காவல்துறை. சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை திணைக்களங்கள் தனித்தனியாக செயற்படுவதுடன், மிகக் குறைந்த ஒருங்கிணைப்புடனேயே செயற்படுகின்றன. அத்துடன் இது இலங்கை நீதி முறைமையின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்தக் கைதிகளுக்கு, தமது தண்டனை காலத்துக்கு மேலதிகமாக சிறையிலிருந்த வருடங்களை கணக்கிட்டு அதற்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும். அத்தகைய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கத் தயாராக இருந்தால், இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தாம் ஆதரவளிக்க தயாரெனவும் சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.